Sunday, August 25, 2013

படித்தேன் பகிர்கிறேன் -3


படித்தேன் பகிர்கிறேன் -3

நூலின் பெயர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர் - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
பதிப்பாளர் - பாரி நிலையம்
விலை - ரூ. 50/-

பக்கம் - 126-128

முடிவு

எத்துறையும்

எனவே, சமணர்கள் எல்லாத் துறைகளிலும் தமிழை வளர்த்துத் தமிழை வாழச் செய்து தமிழ் ஆழத்தைத் தம்மைப் போல் பிறரும் அறியப் பெரிதும் உதவ முயன்றனர். அம் முயற்சியில் வெற்றி கண்டனர். இதில் யாரும் ஐயங்கொள்வதற்கில்லை. சிறந்த இலக்கண நூல்களில் பெரும்பான்மையானவை சமணர்கள் எழுதினவையேயாம். தொல்காப்பியம் சமண நூல் என உறுதி கூறமுடியாமற் போனாலும், சமணம் பரவிய காலத்தெழுந்த தமிழ் வழக்கிற்கே இலக்கணம் கூறுகிறதெனலாம். இறையனாரகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், பிரயோகவிவேகம் நீங்கிய மற்றைய இலக்கணப் பரப்பெல்லாம் சமணர் இட்ட பிச்சையே எனலாம். இவையும் சமண இலக்கணங்களின் துணைகொண்டு விளங்குவனவேயாம். பாட்டுக்களை எல்லாரும் ஒப்புக் கொள்ளும் வகையில் சீர் பிரிப்பதற்குப் பெருவழி ஒன்றை காட்டியவர் யாப்பருங்கலக்காரரே ஆவர். எழுத்து, சொல் ஆராய்ச்சியைச் சிறுவரும் கொண்டு விளையாடும் படியாகச் செய்தவர் நன்னூல் எழுதிய பவணந்தி ஆவர்.

நிகண்டிற்குக் கடைகாலிட்டுக் கோட்டை கட்டியவரெல்லாம் சமணர்களே ஆவர். மேனாட்டார் அகராதி தொடங்குமுன் சமணர் முயற்சியே சிறந்து விளங்கியது. இலக்கியத்தில் பழைய காப்பியங்கள், மணிமேகலை, குண்டலகேசி நீங்கலாக, வழங்கியவையெல்லாம் சமணக் காப்பியங்களே யாம். காப்பிய வழியினைக் கம்பர் முதலோர்க்குச் செவ்வனே அமைத்துத் தந்தவர்களும் அவர்களேயாம். வசனத்திலும் பழைய இலக்கியமாக நின்று நிலவுவது சமணரது ஸ்ரீபுராணம் ஒன்றேயாம். அறவழி நூல்களைச் செய்தவர்கள் பெரும் பான்மையிலும் சமணர். பிறர் எழுதிய அறநூல்களும் சமணர்களிட்ட அறநூல் திட்டத்தைப் பின்பற்றுவனவேயாம். திருவள்ளுவர் சமணர் அல்லர் என்று கொள்வோரும் சமண அடிப்படையாம் அருளறத்தின் மேலேதான் திருவள்ளுவர் எக்காலத்துக்கும் எந்நாட்டினர்க்கும் தக்கதானதொரு அறக்கோயிலை எழுப்பியுள்ளார் என்று ஒப்புக் கொள்ளுதல் வேண்டும். ஆதலின், எந்தத் துறையை நோக்கினாலும் சமணர் செய்த பேருதவியைத் தமிழர் எந்த நாளும் மறுப்பதற்கில்லை. இந்த உண்மையை 20 ஆம் நூற்றாண்டைய தமிழர்கள் நன்குணர்ந்து போற்றிவருகிறார்கள்.



-
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்